பர்மிங்காம், ஆக.3: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்தது. 2-ம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 10 ரன்னில் கேட்ச் ஆகி அதிர்ச்சியளிக்க, ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறந்த ஆட்டத்தை கொடுத்தனர். ஜோ ரூட் 57 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த ஜோ டென்லி (18), பட்லர் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. ரோரி பர்ன்ஸ் சதம் கடந்தும் (125), பென் ஸ்டோக்ஸ் (38) ஆகியோர் களத்தில் உள்ள நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.