ராய்ப்பூர், ஆக.3: சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள சிதகோட்டா என்ற வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு முகாமிட்டு பதுங்கியிருந்த நக்சலைட்கள் அதிரடிப் படையினரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இந்த முயற்சியை தடுக்கும் வகையில் அதிரடிப்படையினர் துப்பாக்கியால் நக்சலைட்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஏழு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.