சென்னை, ஆக. 3: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அன்னாரது நினைவு தினம் ஆடி 18ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் விருகை வி. என். ரவி, அரசு தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்
அ. கார்த்திக், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையொட்டி கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவச்சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு நிழற்குடையும் போடப்பட்டு இருந்தது. வழிநெடுக அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. முதலமைச்சருடன¢ஏராளமான தொண்டர்களும் வந்திருந்தனர். வழிநெடுக காலையில் இருந்தே போக்குவரத்தை போலீசார் ஒழுங்கு படுத்தினர்