புதுடெல்லி, ஆக.3: காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்து தெரியவந்துள்ளது. இந்த வழித்தடத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டெலஸ்கோப் துப்பாக்கி மற்றும் கண்ணி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை இந்திய ராணுவம் கண்டுப்பிடித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஒரு வாரமாக துணைராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகிறார்கள். அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் மட்டும் 32,500 துருப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளனர். அடுத்த சில நாட்களில் இது 90 ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் கண்ணி வெடிகள் அமெரிக்க தயாரிப்பான டெல்ஸ்கோப் துப்பாக்கிகள் போன்றவற்றை இந்திய படைகள் மீட்டுள்ளது.
தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைக்காக அமெரிக்கா வழங்கிய இந்த ஆயுதங்களை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கே வழங்கியதா? அல்லது இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டு பதுக்கி வைத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்தின் தளபதி கே.ஜே.எஸ் தில்லான் கூறுகையில், பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நில கண்ணி வெடிகள் உள்ளிட்ட பிற ஆயுதங்களை கைப்பற்றியிருக்கிறோம் என்றார்.