ஸ்டாலினுக்கு தகுதியில்லை வேலூர் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

அரசியல் தமிழ்நாடு

வேலூர், ஆக.3: சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதே திமுகவினர் தான் என்பதால் அது பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்.ஏ.சி.சண்முகம் ஆதரித்து நேற்று அணைக்கட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எங்கே பார்த்தாலும் ஊழல், ஊழல் என்று சொல்கிறார், ஸ்டாலின்.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் ஊழல் செய்யவில்லையென்றால், எப்படி கட்டுக் கட்டாக ரூ.10 கோடி பணம் வரும்? இதையெல்லாம் தேர்தல் முடிந்த பின்பு வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை தக்கபடி விசாரித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதையெல்லாம் முறைப்படி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள். இது தான் உண்மை.

உண்மையை மறைப்பதற்கு எப்படியெல்லாம் பேசுகிறார்கள், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது மாதிரி, தப்பு செய்ததெல்லாம், ஆனால் பழியை நம்மேல் போடுகிறார்கள். ஆகவே, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இந்த நேரத்தில் இதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

இப்பொழுது திமுக-வில் வாரிசு அரசியல் நடக்கவில்லையா? இவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஸ்டாலின், உதயநிதியை ஊர், ஊராக அழைத்துச் செல்கிறார். எங்களுடைய வயதிற்கும், அவருடைய வயதிற்கும் எவ்வளவு வித்தியாசம்? உதயநிதி ஏதோ ஜாதகம் போல் கணித்து விட்டு அடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும் என்று கூறுகிறார்.

ஏற்கனவே வெற்றி பெற்று நீங்கள் சும்மா தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள், ஒன்றும் செய்யப் போவதில்லை. திமுக-வினர் நான்கு வாக்குறுதிகளை கொடுத்தார்கள், ஜெயித்துச் சென்றுவிட்டார்கள்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைப் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசி வருகிறார். திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர், அவரது பணிப்பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற திரு.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.

உமாமகேஸ்வரி உட்பட மூன்று பேரை கொலை செய்தவர்கள் தி.மு.க பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் என்பதை இரண்டே நாட்களில் கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த வித தகுதியும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.