டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வென்ற மை டீம் 11

சென்னை

சென்னை, ஆக.3: இந்தியாவின் முன்னணி பிரபலமான விளையாட்டு தளமாக விளங்கிவரும் ‘மை டீம் 11’ எனப்படும் ஆன்ட்ராய்டு ஆப் நிறுவனம், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெ.இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி-20, ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இன்று தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், முதல் 2 டி-20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறுகிறது.

உலகக்கோப்பைக்கு பிறகான இந்திய அணியின் முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை இந்தியாவின் பிரபல விளையாட்டு தளமாக விளங்கிவரும் ‘மை டீம் 11’ எனப்படும் ஆன்ட்ராய்டு ஆப் நிறுவனம் பெற்றுள்ளது.

இதன்மூலம், இந்தியா-விண்டீஸ் கிரிக்கெட் தொடர், ‘மைடீம் 11 சர்வதேச தொடர்’ என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து, மேற்கிந்திய கிரிக்கெட் வணிக மற்றும் சந்தைப்பிரிவின் இயக்குனர் டொமினிக்க வார்னே கூறுகையில், இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை வென்ற மைடீம் 11 நிறுவனத்தை வாழ்த்தி, வரவேற்கிறேன். இதன்மூலம், விளையாட்டு ஆர்வலர்களும், கிரிக்கெட் போட்டியின் ரசிகர்களும் கூடுதல் மகிழ்ச்சியை பெறுவர்.

இந்தியா-வெ.இண்டீஸ் இடையிலான போட்டி, சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் போட்டி என்பதால், இந்த தொடர் பரபரப்பாக அமையும். அதுவும், கரிபியன் தீவில் நடக்கும் போட்டி, ஒவ்வொரு ரசிகர்களையும் கவர்வதாக அமையும், என்றார்.