ஸ்ரீநகர், ஆக.4: காஷ்மீரில் ஊடுருவிய 7 பாகிஸ்தான் அதிரடிப்படை வீரர்களின் உடல்களை அந்நாட்டு ராணுவத்தினர் வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் செல்வதற்கு இந்திய ராணுவம் அனுமதித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அங்கு ராணுவ வீரர்கள் நேற்று கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

காஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, இந்திய எல்லைக்குள் கெரான் பிரிவில் ஊடுருவும் முயற்சியாக பாகிஸ்தானிய அதிரடி படையினர் ஈடுபட்டனர். அவர்களை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து தடுத்தது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய அதிரடி படையினர் மற்றும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அவர்களின் உடல்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிடக்கின்றன.

இந்த நிலையில், சுட்டு கொல்லப்பட்ட 7 பாகிஸ்தான் வீரர்களின் உடலை கொண்டு செல்ல இந்திய ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களது உடல்களை கொண்டு செல்ல முறைப்படி வெள்ளை கொடி ஏந்தி அணுகும்படியும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இதேபோல் இந்திய ராணுவம் அழைத்த போதெல்லாம் பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டது இல்லை. அதேபோல்தான் இப்போதும் நடக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் வீரர்களை தீவிரவாதிகள் என்றும் அந்த நாடு கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்போவதாகவும், காஷ்மீர், லடாக், ஜம்மு என மூன்று பகுதிகளாக பிரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவத்தினரின் ஊடுருவலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.