காஞ்சிபுரம், ஆக.4: காஞ்சிபுரத்தில் ஸ்ரீ அத்திவரதர் 35-ம் நாளான இன்று வெந்தய நிறப் பட்டாடையும் செண்பகப்பூ மாலையும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விடுமுறை நாள் என்பதால் இன்றும் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 -ம் தேதி முதல் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முப்பத்தி ஐந்தாவது நாளாக அத்திவரதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கி 5:30 மணிக்கு பக்தர்களுக்கு வெந்தய நிற பட்டாடையில் மல்லிகைப்பூ மற்றும் ரோஜா பூமாலைகள் உடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கத் தொடங்கினார்.

34-ம் நாளான நேற்று 1 லட்சத்து 85 ஆயிரம் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கடந்த 34 நாட்களில் 52 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நேற்று ஆடி பூரம் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று பக்தர்கள் மூன்று கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.