சென்னை, ஆக.4: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், இந்த தொகுதியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதில் 179 வாக்குசாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, வாக்குபதிவு அனைத்தும் சிசிடிவி மூலம் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிக்க முடிவு செய்துள்ளது.

வேலூர் தொகுதியில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்தது. இதனால், வெளியூர் வாசிகளை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கருத்துக் கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளில் 7ஆயிரத்து 479 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமானவை என கண்டறியப்பட்ட 179 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கான பணிகள் இன்று மாலைக்குள் நிறைவடையும். நாளை காலை 7மணிக்கு வாக்குபதிவு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறும். 6 மணிக்கு முன்பாக வாக்குசாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பின்னரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறும் பொருட்டு 6 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.