1980களில் நடக்கும் கதை. ‌ஷமன் மித்ருவின் தந்தை அழகு ஊர் ஊராக சென்று ஆட்டு கிடை போடும் தொழில் செய்பவர். அழகுவின் தூரத்து சொந்தமான குமணனின் உதவியுடன் ஒரு ஊரில் கிடை போடுகிறார். குமணன் மகள் சத்யகலாவுக்கும் ‌ஷமன் மித்ருவுக்கும் காதல் ஆகிறது.

அந்த ஊரில் திருடுவதையே வழக்கமாக வைத்திருக்கும் சுந்தர்ராஜ், சீலன், முத்துராமன் ஆகியோருடன் ‌ஷமனுக்கு நட்பு ஏற்படுகிறது. இதனால் குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி விடுகிறார்.
தவறான வழியில் சென்ற ‌ஷமனை திருத்துவதற்காகவே பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை சத்யகலா திருமணம் செய்துகொள்கிறார். ‌

ஷமனால் அந்த 3 பேரின் நட்பை விட முடியவில்லை. கூடா நட்பின் காரணமாக ‌ஷமனுக்கு என்ன ஆகிறது? அதற்கு அவர் கொடுக்கும் விலை என்ன? ‌ஷமன் சத்யகலா திருமண வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே மீதி கதை.

ஆடு மேய்ப்பவர்களின் பின்புலத்தை மையமாக கொண்டு அவர்களது வாழ்வியலை அழகாக சொல்லும் படமாக தொரட்டி வந்துள்ளது. தொரட்டி என்பது அவர்கள் பயன்படுத்தும் குச்சியுடன் கூடிய அருவா கத்தி. ஆடு மேய்பவர்களின் வாழ்வியலை புதுமுகங்களை வைத்துக்கொண்டு எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் அழகான ஒரு காவியமாக இயக்குனர் பி.மாரிமுத்து கொடுத்துள்ளார்.

கதையின் நாயகனாக வரும் ‌ஷமன் மித்ரு. சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். சத்யகலாவுடனான காதல், தந்தை மீதான பாசம், நண்பர்களுடனான கேளிக்கை என அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். நாயகி சத்யகலாவும் சிறப்பாக நடித்துள்ளார்.

அழகு, ஜானகி, ஸ்டெல்லா, குமணன், விஜய் பாலாஜி என மற்ற அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே தெரிகிறார்கள். நண்பர்களாக வரும் 3 பேரும் சரியான தேர்வுகள். வில்லத்தனமான நடிப்பால் கவர்கிறார்கள். குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் படம் பழிச்சிடுகிறது. வேத் சங்கரின் இசையில் பாடல்களும் ஜித்தனின் பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.