சென்னை, ஆக.4: சென்னையில் பேருந்து துரித போக்கு வரத்து திட்டத்திற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருப்பதாக முதல்நாள் கருத்து கேட்பு கூட்டத்தில் தெரியவந்தது. கோயம்பேட்டில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் மேலும் பல வழித்தடத்தில் இந்த திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், கட்டணத்தை உயர்த்த கூடாது என்றும் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சாலைகளில் பேருந்துக்கு தனிப்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி, அம்பத்தூர், சைதாப்பேட்டை, சிறுசேரி, மாதவரம், துரைப்பாக்கம் ஆகிய வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

இத்திட்டம் குறித்து பல்லவன் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற அமைப்பு பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. நேற்று காலை கோயம்பேடு சிஎம்பிடியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பயணிகள் மற்றும் குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகளை கூறுமாறு அதிகாரிகள் கேட்டனர். முதல்கட்டமாக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையி லான வழித்தடம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

இந்த வழித்தடத்தில் பேருந்துக்கு என்று தனி பாதை அமைப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் நெரிசலில் சிக்காமல் பயணிக்க முடியும் என்றும், இத்திட்டத்திற்காக மேலும் சில வழித்தடங்களை சேர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக தாம்பரம் – வேளச்சேரி, தரமணி- திருவான்மியூர் ஆகிய வழித்தடங்களையும் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இந்த பேருந்துகளுக்கு கட்டணம் நியாயமான முறையில் இருக்க வேண்டும் என்றும், கட்டணத்தை எக்காரணத்தை கொண்டும் உயர்த்த கூடாது என்றும் கூறினர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அரசின் நோக்கம் போக்கு வரத்து நெரிசலை குறைப்பது மட்டுமின்றி நியாயமாக கட்டணம் வசூலித்து ஏழை மக்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இன்று 4-ந் தேதியும் கோயம்பேட்டில் தொடர்ந்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை பூந்தமல்லி பேருந்து நிலையத்திலும், 6-ந் தேதி சிஐடி நகர் சமுதாய கூடத்திலும், 7-ந் தேதி மடுவன்கரை சமுதாய கூடத்திலும், 8-ந் தேதி காரப்பாக்கம் சமுதாய கூடத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டங்கள் நடைபெற உள்ளன.