வேலூர், ஆக.5:  வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வார்டு வாரியாக பட்டுவாடா செய்ய பணம் கட்டுகட்டாக சிக்கியதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள 38 தொகுதிகளில், 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள்.

பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வேலூரில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர். இவர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 176 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு உள்ளன.

வாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வாக்கு சாவடிகளுக்கு ஆர்வமுடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 75 சதவீதம் வரை வாக்குகள் பதிவாக வாய்ப்பிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.