வேலூர், ஆக.5: வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.4% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வேலூரில் 8.79, அணைக்கட்டில் 6.10, கே.வி.குப்பத்தில் 8.85, குடியாத்தத்தில் 6.79, வாணியம்பாடியில் 6.29, ஆம்பூரில் 7.76 சதவீதமாக வாக்குப்பதிவாகி இருந்தது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூத் சிலிப் உடன் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். ஆனால் பூத் சிலிப் மட்டும் வாக்களிக்க போதுமான ஆவணம் இல்லை என்று மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலான சாவடிகளில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றாலும். இந்திரா நகர், ஆம்பூர் ஆகிய வாக்குச்சாவடிகளில் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சத்துவாச்சேரி வாக்குச்சாவடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அல்லாபுரம் வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

மாலை 6 மணி வரை நடைபெறும் தேர்தலில், 14.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 20 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.