லாடர்ஹில், ஆக.5:  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்றது.

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.. முதல் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், இரண்டாவது டி20 போட்டியும் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் (23 ரன்கள்) – ரோகித் சர்மா (67 ரன்கள்) ஜோடி நல்ல துவக்கத்தை அளித்தது.

பின்னர் வந்த கோலி (28 ரன்கள்) எடுத்தாலும் அடுத்து வந்த பண்ட் (4 ரன்கள்), மனீஷ் பாண்டே (6 ரன்கள்) அடுத்தடுத்து வெளியேறியதால் இந்திய அணி ரன்கள் எடுக்க திணறியது. கடைசியில் க்ருனால் பாண்டியா (20 ரன்கள்) அதிரடியால் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.

168 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்களான சுனில் நரைன் (4 ரன்கள்), லீவிஸ் (0) ரன்களில் வெளியேற, பூரன் 19 ரன் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த பாவெல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்த நிலையில், போலார்டு, ஹாட்மேயர் ஜோடி அதிரடி காட்ட துவங்குகையில் பலத்த இடி இடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. பின் மழையும் குறுக்கிட போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை நீடித்ததால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என வென்றது. ஆட்ட நாயகனாக இரு விக்கெட்கள் மற்றும் 20 ரன்கள் அடித்த க்ருனால் பாண்டியா அறிவிக்கப்பட்டார்.