சென்னை, ஆக. 5: நெற்குன்றத்தில் கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடிவருகின்றனர். சென்னை கோயம்பேடு அடுத்துள்ள நெற்குன்றம் ஏ.வி.கே நகர் மெயின்ரோட்டில் தனியார் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் இந்த நிறுவனத்தின் முன்பாக சாலை ஓரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

தகவலறிந்துவந்த கோயம்பேடு போலீசார், அந்த சடலத்தை கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 23) என்பதும், இவர் மீது கடந்த ஆண்டு பூந்தமல்லியில் இரவு ரோந்து பணியில் இருந்த அன்பழகன் என்ற போலீஸ்காரரை தாக்கிய வழக்கு, திருவேற்காட்டில் கொலை முயற்சி வழக்கு என்பது உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து. துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் ஜெயராமன் மேற்பார்வையில், கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இதனடிப்படையில், நெற்குன்றத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), தினேஷ் (வயது 21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று அனைவரும் மது அருந்தியிருந்ததாகவும், அப்போது, யார் பெரிய ரவுடி? என்பதில் தங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி அடிதடியானதில், ஆத்திரமடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து ரஞ்சித்தை தாக்கியதுடன், பாட்டிலால் குத்திவிட்டு தப்பிவிட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.