புதுடெல்லி, ஆக. 5: ஐம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இதற்கான மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை நாடாளுமன்றத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லடாக், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். இதன் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட தனி கொடி மற்றும் சின்னம் ரத்தாகிறது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக படை குவிக்கப்பட்டு பதற்றம் நிலவியது. மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதுகுறித்து இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவை மத்திய உள்துறை அமைச்சர் முதலில் மாநிலங்களவையில் அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை அளிக்கப்பட்ட அரசியல் சாசனப் பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்வதென அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை தனி மாநிலமாக செயல்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அதன் அதிகார வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. பௌத்தர்கள் அதிகமாக வாழும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் சட்டமன்றம் இருக்காது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் பேசினார்.

மசோதாக்களை அறிமுகப்படுத்தி பேசிய அவர், காஷ்மீர் நிலைமையை விளக்கி மாநில நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார். இதற்கு எதிர் கட்சி எம்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

எம்.பி.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவைதலைவர் வெங்கையா நாயுடு ஈடுபட்டார். அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் அவை சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவின் நகலும் ஊடகங்களில் அறிவிக்கையாக வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ஒப்புதல் பெற்றதையடுத்து. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஜம்மு-காஷ்மிருக்கு இதுவரை வழங்கப்பட்ட தனி கொடி, தனி சின்னம் ஆகியவை வாப்பஸ் பெறப்படுகிறது. ஜம்மு-காஷ்மிர் யூனியர் பிரதேசம் ஆக்கப்படுவதால் இந்த மாநில சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரமும் ரத்து ஆகிறது.

காஷ்மீர் குடிமக்கள் யார் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும். வெளிமாநிலத்தவர் சொத்து வாங்கவும், நிரந்தரமாக குடியேரவும் மத்திய அரசே நடவடிக்கை எடுக்கும்.
மோடி உரையாற்றுகிறார்:

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவுகள் குறித்து நாட்டு மக்களுக்கு வரும் 7-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுவார் என மத்திய அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உரை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளிபரப்பப்படுகிறது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு ரத்து செய்யப்படுவதன் மூலம் இந்தியாவில் வசிக்கும் யாரும் அங்கு சொத்துக்களை வாங்கக்கூடிய நிலைமை உருவாகும்.

ஆதரவும், எதிர்ப்பும்…

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு அதிமுக, ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா மப்தி கூறியுள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ஜனநாயகத்தில் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.