வேலூர், ஆக. 5: வேலூர் மக்களவை தொகுதியில் காலை வரை மந்தமாக இருந்த வாக்குபதிவு மதியம் விறுவிறுப்பு அடைந்தது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது பற்றி புகார் காரணமாக கடந்த ஏப்ரலில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகிறார்கள்.

காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள 1553 வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மாலையே பரிசோதிக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்து.

வேலூரில் சத்துவாச்சேரி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. மதியத்திற்கு பிறகு நீண்ட வரிசை காணப்பட்டது. காலை 10 மணி நிலவரப்படி வேலூரில் 8.75, அணைக்கட்டில் 7.06, கே.வி.குப்பத்தில் 8.05, குடியாத்தத்தில் 6.29, வாணியம்பாடியில் 6.04, ஆம்பூரில் 6.29, சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முற்பகல் 11 மணி நிலவரப்படி வேலூரில் 14.3 சதவீதம், அணைக்கட்டு 12.56, கே.வி.குப்பம் 16.90, குடியாத்தம் 15.96, வாணியம்பாடி16.32, ஆம்பூர் 12.40 என மொத்தம் 16.61 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்தது.

மதியத்திற்கு பிறகு மேலு விறுவிறுப்பு அடைந்ததால் 75 சதவீதத்திற்கு குறையாமல் வாக்குக்கள் பதிவாக வாய்ப்பிருப்பதாக மாவட்ட கலெக்டரும் தேர்தல் ஆணையருமான சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

எல்லா வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 7,500 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலை 6 மணி இடைவிடாமல் வாக்குபதிவு நடைபெறும். 6 மணிக்கு பிறகு இவிஎம் இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச்செல்லப்படும். அங்கு 24 மணி நேர பாதுகாப்புடன் வைக்கப்பட்டு 9-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் அன்று பிற்பகலில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி:

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

1 மணி நிலவரப்படி 30 சதவிகித வாக்குகள் பதிவானது. வேலூரில் சுமூகமாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது,இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என்று புகார் எதுவும் வரவில்லை, எதுவும் மாற்றப்படவில்லை.

850 வாக்குச்சாவடிகள் காணொளி காட்சி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு :-

பகல் 1 மணி நிலவரம் வேலூர் – 24.73%

அணைக்கட்டு- 27.14%

கே.வி குப்பம் – 30.75%

குடியாத்தம் – 32.43%

வாணியம்பாடி – 30.21%.

ஆம்பூர் – 31.48%

ஆக மொத்தம் 29.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்றார்.