புதுடெல்லி, ஆக.5: நாடாளுமன்ற மேலவையில் அரசியலமைப்பினை கிழிக்க முயன்ற மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களை வெளியேறும்படி சபாநாயகர் வெங்கையா நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் இன்று கூடியது.

இதில் பேசிய மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

இதனிடையே, மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலும், கோஷமும் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.

இந்த நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மீர் பயஸ் மற்றும் நசீர் அகமது லாவே ஆகிய 2 எம்.பி.க்கள் அவையில் அரசியலமைப்பினை கிழிக்க முயன்றனர். இதனால் அவர்கள் இருவரையும் அவையில் இருந்து வெளியேறும்படி சபாநாயகர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறிய எம்பிக்களில் ஒருவர் திடீரென்று தனது சட்டையை கிழித்துகொண்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டார். அவையில் இருந்து வெளியே வந்த அவர்கள் இருவரும் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.