காஞ்சிபுரம், ஆக. 5: நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளியிருக்கும் ஆதி அத்திவரதரை இதுவரை 50 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

ஆதி அத்திவரதர் இன்று மெஜந்தா நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். செண்பகம், மல்லிகை, ரோஜா மாலைகள் அலங்காரத்தில் அத்திவரதர் அருள்பாலித்தார்.

36-ம் நாளான இன்று அத்திவரதரின் கிரீடத்தில் மல்லிகை, ரோஜாக்கள், ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டும், அபயஹஸ்தத்தில் தாழம்பூ மற்றும் ஏலக்காயால் தொடுக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டிருந்ததும் அத்திவரதருக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது.

மேலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. நேற்றை விட இன்று பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டதால் பக்தர்கள் நின்று நிதானமாக அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் சுமார் மூன்று லட்சம் பேர் பெருமாளை தரிசித்தனர். இன்றும் அதே அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்தி வரதரை தரிசித்திருக்கிறார்கள்.