சென்னை, ஆக.5: நிலவின் தென்துருவத்தில், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் தரையிறங்கும் காட்சியை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கும் விண்கலம், இதுவரை படிப்படியாக நான்குமுறை நிலை உயர்த்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று மேலும் 2 முறை புவி சுற்றுப்பாதையில் விண்கலம் நிலை உயர்த்தப்பட உள்ளது. அதாவது, வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகல் 2.30 மணியளவிலும், இறுதியாக வரும் 14-ஆம் தேதியும் நிலை உயர்த்தப்பட உள்ளது. அன்றைய தினமே நிலவை நோக்கிய தனது பயணத்தையும் விண்கலம் தொடங்க உள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர் அமைப்பு, நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி மெதுவாக தரையிறங்க உள்ளது. நிலவின் பரப்பில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காண உள்ளார். பிரதமருடன் சேர்ந்து இந்த நிகழ்வை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்களும் நேரில் காண வாய்ப்பளிக்கும் வகையில் விநாடி- வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

லீttஜீs://ஹீuவீக்ஷ்.னீஹ்ரீஷீஸ்.வீஸீ என்ற வலைதளம் மூலம் இந்த விநாடி- வினா போட்டியில் பங்கேற்கலாம். ஆகஸ்ட் 10-ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி 20-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்கு முடிந்துவிடும்.
இந்தப் போட்டியில் 20 கேள்விகளுக்கு 5 நிமிஷங்களில் பதிலளிக்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பிரதமருடன் காணும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.