மத்திய நிதியை திருப்பி அனுப்பவே இல்லை

சென்னை

சென்னை, ஆக.5: தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3600 கோடியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதிமுக ஆட்சியில் இது போல் நடந்தது இல்லை. திமுக ஆட்சியில் தான் நடந்து இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று சேலம் அரசுப் பொருள்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் பேசியதாவது:- அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிற விதமாக இருக்கிற காரணத்தினாலே இதை தெளிவுபடுத்துவது அரசினுடைய கடமையாகும். 2017-18 -ஆம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் மாநில நிதிநிலை மீதான அறிக்கையில் தமிழக அரசால் ஏறத்தாழ ரூ.3,600 கோடி அளவுக்கு வரப்பெற்ற மத்திய அரசின் மானியங்களைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி உள்ளதாக சில பத்திரிகைகளில் ஒரு தவறான கருத்து வெளியாகியுள்ளது.

சில திட்டங்களுக்கான எதிர்பார்க்கப்படும் நிதி மத்திய அரசிடமிருந்து வரப்படவில்லை என்றால், மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அதற்காக செய்யப்படும் ஒதுக்கீட்டை அந்த ஆண்டு விடுவிக்காமல் அதை சேமிப்பாகக் கருதுகிறோம். தொடர்ந்து அடுத்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து நிதி வரப்பெறும்போது அந்தத் திட்டங்களுக்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. அந்தவகையில், மாநில அரசு மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பிக் கொடுத்துள்ளது என்று கூறுவது ஒரு தவறான கருத்தாகும்.

மத்திய அரசிடமிருந்து 2017-18-ம் ஆண்டில் பெறப்பட்ட தொகை குறைந்துவிட்ட காரணத்தினால், மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை 2017-18-ஆம் ஆண்டு முறையாக விடுவிக்க இயலவில்லை. 2018-19-ஆம் ஆண்டு இந்தத் தொகை விடுவிக்கப்பட்டது.

எனவே, இதுபோன்ற திட்டங்களுக்கு அதே நிதியாண்டில் மத்திய அரசின் நிதி பெறப்படவில்லை என்ற நிலையில் சேமிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றவுடன் இந்தத் தொகைகளை மாநில அரசு விடுவித்து திட்டங்களை சீரான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, ஒருபோதும் மாநில அரசு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஒருநிலை ஏற்படவில்லை. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை நாங்கள் முழுமையாக பயன்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.