சென்னை, ஆக. 5: காங்கிரஸ் புதிய தலைவராக சச்சின் பைலட்டை தேர்வு செய்வதா, அல்லது ஜோதி ராதித்யா சிந்தியாவை தேர்வு செய்வதா என்பது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இடையே காரசாரமான விவாதம் தொடங்கி இருக்கிறது.  10-ந் தேதி நடைபெற இருக்கும் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது தெரியும்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். பதவி விலகல் முடிவை வாபஸ் பெறும்படி தலைவர்கள் செய்த சமரசத்தை ராகுல் காந்தி ஏற்கவில்லை.

இந்நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் வரும் 10-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால், சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், “தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் வரும் 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவராக பிரியங்காவை தேர்வு செய்ய மூத்த தலைவர் கரண் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் தலைவர் பதவியை பிரியங்கா விரும்பவில்லை என்று தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், கட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு தற்காலிகமாக தலைவர் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். கட்சியிலுள்ள முக்கிய பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்‘ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவுத் தலைவரான மிலிந்த் தேவ்ரா கூறுகையில், “கட்சித் தலைவர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடம் உள்ளன. அவர்கள் இருவரில் ஒருவரை தலைவராக்கலாம். அல்லது குறைந்தப்பட்சம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையிலுமாவது, தற்காலிகத் தலைவராக 2 பேரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு சோனியா காந்தி குடும்பத்தினரின் வெளிப்படையான ஆதரவு அவசியம்‘ என்றார்.
பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கூறுகையில், இளைஞர் ஒருவர் தலைவராக வேண்டும். அவர் ஜோதி ராதித்திய சிந்தியாவா அல்லது சச்சின் பைலட்டா என்பதை விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.