புதுடெல்லி, ஆக.6: காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உயிரைக் கொடுத்தாவது மீட்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் ஆவேசமாக பேசினார்.

இதனை நிறைவேற்றுவதில் எந்த சக்தியும் எங்களை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசனப்பிரிவு 370, 35ஏ ஆகிய பிரிவுகள் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டது.

காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கவும் இதன் மூலம் வகை செய்யப்பட்டது.  லடாக்கை பொறுத்தவரை சட்டமன்றம் இல்லாத நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று மாநிலங்களவையில் மறுசீரமைப்புக்கு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  மக்களவையில் அமித்ஷா பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்த நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இந்திய எல்லைக்குள் தான் வருகிறது. அதே போல சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியும் இந்தியாவின் ஒரு பகுதிதான். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயிரையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காங்கிரஸ் கட்சி மக்களவைத் தலைவர் சவுத்ரி எழுந்து, நீங்கள் அனைத்து விதிமுறைகளையும் மீறி காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்திருக்கிறீர்கள் என்று கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரைப் பற்றி நீங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று அவர் கூறினார்

இதற்கு அமித் ஷா பதிலளித்தார். ஐநா இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறதா என்று கேட்டார். ஜம்மு காஷ்மீர் குறித்து இந்த நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அவர் கூறினார். அப்போது பாரத மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம் என்று பிஜேபி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அறிவிக்கப்படாத அவசர நிலை தற்போது நிலவுகிறது என திமுக எம்பி டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

திமுகவின் மற்றொரு உறுப்பினரான தயாநிதி மாறனும் இதுபற்றி பேசினார். நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை இதுபோல் கைது செய்வது சரிதானா என்று கேட்டார்.

காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி பேசுகையில், யூனியன் பிரதேசங்களைத் தான் இது வரை மாநிலமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. ஆனால் ,இப்போது ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-

பிரிந்துள்ள காஷ்மீரை ஒன்றிணைக்கும் முயற்சி இது . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அக்சை சின், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவையே. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என கூறினார்.

ராகுல்காந்தி:

இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மனிதர்களால் ஆனதுதான் நாடு, வெறும் நிலப்பரப்பால் ஆனது அல்ல என்று அவர் தனது டுவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.