வாஷிங்டன், ஆக.6: ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் உள்விவகாரம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்தசிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் இரண்டு யுனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது அந்நாட்டின் உள்விவகாரம். இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

ஆனால், காஷ்மீரைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. தனிப்பட்டவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்

இதே போல பாகிஸ்தானுக்கு சில அறிவுரைகளை அவர் கூறியிருக்கிறார். அனைத்துத் தரப்பினரும் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மோர்கன் பாகிஸ்தானுக்கு அனுப்பிய செய்தியில் கூறியிருக்கிறார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்திருந்தார். இது இரு நாடுகளுக்கிடையே உறவை மேலும் சீர்குலைக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள இந்திய ஹைகமிஷனர் அஜய் பிசாரியாவை அழைத்து தங்கள் கண்டனத்தை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.