சென்னை, ஆக. 6: தேசிய கைத்தறி தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர¢ எடப்பாடி பழனிசாமி நெசவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும், 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கைத்தறி தொழில், நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.51 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன.

அரசு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கிடும் நோக்கில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம், எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளையின் கீழ் நெசவாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துதல், புதிய வடிவமைப்பு திறன்களை மேம்படுத்துதல், கைத்தறி துணிகளை சந்தைப்படுத்துதல், கைத்தறி துணிகளை பிரபலப்படுத்துதல், பாரம்பரியம்மிக்க கைத்தறி நெசவினை பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கென செயல்படுத்தி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.