சென்னை, ஆக.6: அடுத்த 2 தினங்களுக்கு நீலகிரி மற்றும் கோவையில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில், அடுத்துவரும் 3 தினங்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி மற்றும் கோவையில் கடந்த இரு தினங்களாகவே பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், அடுத்துவரும் இரு தினங்களுக்கு இந்த மழை தொடரும் என்றும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 18 செ.மீ., மழை, வால்பாறையில் 14 செ.மீ., ஜி.பஜார், உப்பர் பவானியில் தலா 11 செ.மீ., சின்னக்கல்லாரில் 10 செ.மீ.,தேவாலாவில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது. தேனி பெரியார், நெல்லை பாபநாசம், செங்கோட்டையில் தலா 4 செ.மீ., மகாபலிபுரத்தில் 3 செ.மீ., காஞ்சிபுரம், கேளம்பாக்கத்தில் தலா 2 செ.மீ., மழையும் பெய்துள்ளது.