காஞ்சிபுரம், ஆக.6: அத்தி வரதரை தரிசிக்க நேற்று ஒரே நாளில் மூன்று லட்சம் பேர் கூடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவர்களில் ஒரு பகுதியினர் இரவு தங்கி இன்று காலையில் தரிசனம் செய்தனர்.

ஆதி அத்திவரதர் நின்ற கோலத்தில் 6-வது நாளாக இன்று எம்பெருமானுக்கு வெள்ளை நிற பட்டாடையில் நீலம், பச்சை நிற வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, செண்பகம், மல்லிகை, ரோஜா மாலைகளும் , அபயஹஸ்தத்தில் செண்பகம், மல்லி மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு காட்சி கொடுத்து வருகிறார்.

விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களை மிஞ்சும் அளவுக்கு நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. மூன்று லட்சம் பக்தர்கள் நேற்றைய தினம் காஞ்சிக்கு வருகை தந்ததால் தரிசனத்துக்காக சுமார் 3 கி.மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் சுமார் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்தனர்.

இரவு அத்தி வரதரை தரிசிக்க முடியாதவர்கள் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்து இன்று காலை தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பை கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நின்ற கோலத்தின் 5 நாளான நேற்று கூட்டத்தை பார்த்து பிரமித்து போன பக்தர்கள் அத்திவரதரை காண முடியாமல் திரும்பி சென்றுள்ளனர். நேற்று வரை சுமார் 57 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. இருந்த போதிலும் எதிர்பார்த்த கூட்டத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதால் ஓய்வின்றி மாவட்ட நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.