சென்னை, ஆக.6: கோமாளி பட டிரைலரில் இடம் பெற்றிருந்த ரஜினி குறித்த காட்சிக்கு நடிகர் ஜெயம்ரவி வருத்தம் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ள அந்த காட்சிகள் நீக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது நடிப்பில் உருவாகி உள்ள கோமாளி படத்தின் டிரைலரில் ரஜினி தொடர்பான குறிப்பிட்ட ஓர் அம்சம், தலைவரின் சில ரசிகர்ளின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது. அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினியின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன்.
அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது. முன்னெப்போதைக் காட்டிலும் அவர் மேல் கூடுதல் பாசம் செலுத்திய தருணம், அவர் ‘கோமாளி’ பத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டியபோது ஏற்பட்டது.

எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும், எந்த விதமான உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியால் அவரது ரசிகர்களில் ஒரு சிலர் கசப்புக்கு ஆளாகி, எதிர்மறைப் பின்னூட்டங்கள் இட நேர்ந்த காரணத்தால், அந்தப் பகுதியைப் படத்தில் இருந்து நீக்க முடிவுசெய்திருக்கிறோம்.