புதுடெல்லி, ஆக.7: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மோடி அரசு எடுத்த நடவடிக்கையை ராகுல் எதிர்த்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதி ராதித்ய சிந்தியா, தீபந்தர் ஹூடா உள்ளிட்ட இளம் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரசில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு, அந்த மாநிலத்தையும் 2 ஆக பிரிக்கிறது. இந்த நடவடிக்கைகளுக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிர்ஆதித்ய சிந்தியா, இந்த நடவடிக்கைகளை ஆதரித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘காஷ்மீர் பிரிவினை மற்றும் இந்தியாவுடன் அதன் ஒருங்கிணைப்பு ஆகிய நடவடிக்கைகளை நான் ஆதரிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் அரசியல்சாசன வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு செய்திருந்தால் கேள்வியே எழுந்திருக்காது. இருப்பினும் நாட்டு நலன்கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இவரை தவிர மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஜனார்தன் திவேதி, தீபேந்தர் ஹூடா, மிலிந்த் தியோரா, ரேபரேலியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங் உள்ளிட்டோரும் காஷ்மீர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஹூடா வெளியிட்டுள்ள பதிவில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு இருப்பது நாட்டின் ஒற்றுமைக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது. இந்த விஷயத்தில் எந்த கேள்விக்கும் இடமில்லை என்று கூறியுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவர் மிலாந்த் தியோரா கூறுகையில், 370-வது சட்டப்பிரிவில் விவாதம் நடத்துவது துரதிர்ஷ்ட வசமானது என்று கூறியுள்ளார்.

ராஜ்ய சபா, காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிதா ஏற்கனவே எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் காஷ்மீர் தொடர்பான மசோதாவை எதிர்த்து வாக்களிக்குமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.