சென்னை, ஆக.7: கோடம்பாக்கம் அருகே தாம்பரம் – சென்னை கடற்ரை செல்லும் மின்சார ரெயில் தண்டவாளத்தின் மீது மரக்கிளை ஒடிந்து விழுந்ததால், இன்று காலை சுமார் ஒரு மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் இடையே தாம்பரம்-கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் பாதையில் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்தது, அங்கிருந்த அரசமரத்தின்மீது மின்கம்பி அறுந்து விழவே, அதன் மரக்கிளை ஒடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்தது.

காலை 9.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் தாம்பரம்-பீச் மார்க்கத்தில் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ரெயில்வே ஊழியர்கள் அந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இதன்காரணமாக, சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோரும் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். அலுவலகம் செல்வோர் வெகுநேரம் காத்திருக்க முடியாமல், ரெயிலை விட்டு இறங்கி பேருந்து மூலம் அலுவலகம் சென்றடைந்தனர். சிலர் ரெயில்வே தண்டவாளத்திலேயே நடந்து சென்றனர். இவ்வாறாக, அலுவலக நேரத்தில் மக்கள் அலைக்கழிக்கப்பட்டதால், ரெயில் நிலையங்களில் பதற்றம் நிலவியது. தண்டவாளத்தில் விழுந்த மரக்கிளை அகற்றப்பட்ட பின்னர், ரெயில் சேவை வழக்கம்போல் தொடங்கியது.