சென்னை, ஆக7: நானும், ரஜினியும் 40 ஆண்டு கால நண்பர்கள் என்றும், நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அரசியலில் ஒன்று சேர்ந்தால் புதிய மாற்றம் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் ஒவ்வொரு நடிகர்கள் மாதிரி வேடமிட்டு நடிக்க வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.

இதில் சேரனுக்கு ரஜினி வேடம் கொடுக்கப்பட்டது, கடந்த சனிக்கிழமை ஒவ்வொரு நடிகரிடமும் கமல் உரையாடினார். அப்போது ரஜினி கெட்டப்பில் இருந்த சேரனுடனும் கமல் பேசினார். அப்போது சேரன் நீங்களும், நானும் (ரஜினி) சேர்ந்து பணியாற்றுவதில் தயக்கம் ஏதாவது உண்டா என கேட்டார். அதற்கு பதிலளித்த கமல் நாம் இருவரும் 40 ஆண்டு கால நண்பர்கள். சினிமாவில் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த தடையும் இல்லை.

இருப்பினும் ரசிகர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். மேலும் அரசியலில் நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றினால் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலை தூய்மைப்படுத்தலாம் என்று கூறினார். இந்த உரையாடல் விஜய் டிவியில் எடிட் செய்யப்பட்டு ஒளிப்பரப்பப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்த உரையாடலை கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளரான முரளி அபாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.