காஞ்சிபுரம், ஆக. 7: அத்திவரதர் திருவிழா தரிசனம் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. மதியம் 12 மணிக்கு பிறகு வரும் பக்தர்கள் பொது தரிசன பாதையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்,16, 17தேதிகளில் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் இனி இரவு 2 மணி வரை தரிசனம் நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அத்திவரதர் பெருவிழா நேற்று 37 நாட்கள் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மதியம் 12 மணியுடன் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக செல்லும் போது தரிசன பாதை அடைக்கப்படும். அதன் பிறகு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஏற்கனவே கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் மாலை 5 மணி வரையிலும் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ஆகம விதிகளின்படி அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார். அதிகாலை முதல் 4 மணி வரை நேற்று 3.50 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சுவாமி தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் மேற்கு கோபுரம் வழியாக விரைந்து வெளியே வரும் வகையில் அப்பாதை விரிவுபடுத்தப்படும்.

16 ம்தேதி காஞ்சிபுரம் நகரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. . இதுவரை 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இம்மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால் வரும் 10 ஆம் தேதி முதல் மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பக்தர்கள்கூடுதலாக வருவார்கள் என்பதால் உள்ள முத்தியால்பேட்டை, வந்தவாசி, கிளம்பி ஆகிய 3 இடங்களில் சுமார் 35 ஆயிரம் பக்தர்கள் இளைப்பாறும் வகையில் மேற்கூரையுடன் கூடிய பந்தல்கள் அமைக்கப்பட்டு அங்கு இளைப்பாறிய பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி பாதுகாப்பாக தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுவரை இரவு 11 மணி வரை இருந்த தரிசன நேரம் இனி வரும் நாள்களில் பக்தர்கள் கூட்டத்தைப் பொருத்து இரவு அன்னதானம் வழங்கிட 46 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலி அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது அனுமதி சீட்டை விலகி நிற்பவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅவர் கூறினார். பேட்டியின்போது ஏடிஜிபி ஜெயந்தி முரளி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.