புதுடெல்லி, ஆக.7: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன் பேசி சுமூகமான தீர்வு காணுமாறும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனைகள் குறித்து எதுவும் இப்போது கூற முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது முதலமைச்சர் எடப்பாடி எடுத்த தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. காவிரி ஆற்றின் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு 4996 ஹெக்டேர் நிலப்பரப்பில் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான ரூ9000 கோடி கர்நாடக அரசு அனுமதித்துள்ளது.

நிலம் கையகப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதியை பெறுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இதற்காக அனுமதி கேட்டது. இந்த அமைச்சகத்தின் நிபுணர் குழு கர்நாடகத்தின் வரைவு அறிக்கையை ஆய்வு செய்வதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்களில் கர்நாடகத்தின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய கூடாது என்றும் இந்த அணை கட்டப்பட்டால் காவிரியில் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைபட்டு வடும் என்றும், இது நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக இருக்கும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனிடையே கர்நாடகத்தின் முதலமைச்சராக எடியூரப்பா அண்மையில் பதவியேற்றவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

அப்போது மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதற்கு மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு ஜூலை 19-ந் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. இதில் கர்நாடக அரசுக்கு மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் இந்த முடிவு பற்றிய தகவல் இன்று பரபரப்பாக வெளியாக¤ உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அந்த மாநில அரசுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என கர்நாடக அரசை 11 பேர் கொண்ட நிபுணர் குழு அறிவுறுத்தி உள்ளது.இந்த விஷயத்தில் கர்நாடக அரசு மேலும் பல விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும், மாற்றுத்திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நதி பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் நிலைய திட்டம் தொடர்பான குழுவும், சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக எந்த திட்டத்தையும் பரிந்துரைக்கவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது.