காஞ்சிபுரம், ஆக.7: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருப்பதால் இன்று முதல் தரிசன நேரம் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நின்ற கோலத்தின் 7வது நாளான இன்று எம்பெருமானுக்கு மெஜந்தா, மற்றும் மஞ்சள் நிற பட்டாடையும், செண்பகம், மல்லிகை, ரோஜா மாலைகள் மற்றும் ஏலக்காய் மாலைகள் அணிவிக்கப்பட்டு காட்சி தருகிறார்.

நேற்று ஒரு நாள் மட்டும் 4 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். அதேபோன்று இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம்தேதி அத்திவரதரின் தரிசனம் நிறைவடைவதையொட்டி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் காஞ்சி நகரமே களை கட்டியுள்ளதுடன் எங்கு பார்த்தாலும் குழந்தைகள், முதியோர் என மக்கள் தலைகளை காணமுடிகிறது. இதனால் காவல்துறை சார்பில் ஒலி பெருக்கிகள் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் நெரிசலில் சிக்காமல் செல்லவேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக இரவு 11 மணி வரை இருந்த தரிசன நேரத்தை 3 மணி நேரம் நீட்டித்து அதிகாலை 2 மணி வரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.