பில்லூர் அணை 2-வது முறையாக நிரம்பியது

சென்னை

சென்னை, ஆக.7: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் கனமழை காரணமாக பில்லூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4-வது நாளாக கனமழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மூன்று நாட்களாக மழை நீடித்து வருகிறது. இதனால் கூடலூர் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய தாலுக்காக்களில் கனமழை இன்றும் நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்றாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உதகையில் இருந்து மைசூர் மற்றும் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாந்தி நல்லா பகுதியில், சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக மரத்தை வெட்டி போக்குவரத்தை சீரமைத்தனர்.

மாயாற்றில் உபரிநீர் திறந்துவிடப்படுவதால், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது முறையாக அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 8 ஆயிரத்து 660 கனடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்து 66.75 அடியை எட்டியுள்ளது.