சென்னை, ஆக. 7: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.568 உயர்ந்து, ரூ.28,352-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த 2 மாதங்களுக்குள் ரூ.30,000 தொடும் என கூறப்படுகிறது.

ஜூன் மாதம் முதலே தங்கம் விலை உயர்ந்து வந்தநிலையில், சென்னையில் கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பிறகு, தினசரி உயர்ந்து வந்த நிலையில், சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.27,784-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயர்ந்து, ரூ.3,473-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,304 வரை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.45.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 100 குறைந்து ரூ.45,700 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பவுனுக்கு ரூ.568 உயர்ந்து, ரூ.28,352-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,872 உயர்ந்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.71 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,544க்கும், பவுனுக்கு ரூ.568 உயர்ந்து ரூ.28,352-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் இருபெரும் பொருளாதார சக்தி படைத்த நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக சந்தை கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.30 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.