புதுடெல்லி , ஆக.7: நாடாளுமன்ற இருசபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொது தேர்தலுக்கு பின்னர் ஜூன் 17-ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூலை மாதம் 27-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆகஸ்ட் 7-ம் தேதிவரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டது.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மீது நேற்று காலையில் இருந்து மக்களவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. இரவு 8 மணிக்குள் இந்த மசோதாக்கள் அனைத்தும் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை மாநிலங்களவை சற்று நேரம் கூடியது. சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.