சென்னை, ஆக.8: பல்வேறு சமூகநலத் திட்டங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும். நீராதாரங்களை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு நாள்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெறும் கூட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இரண்டாவது நாளில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர்களுடன், பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை, தொழில் துறை, வேளாண்மை, கால்நடைத் துறை, உணவுத் துறை, வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், நகராட்சி நிர்வாக ஆணையர், பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளர், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

முதல்வர் உரை:

மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசின் முகமாக மாவட்ட நிர்வாகம் விளங்குகின்றது. நீங்கள் மாவட்ட அளவில் அரசின் கண்ணாகவும், கரங்களாகவும் செயல்பட்டால், அரசின் திட்டங்கள் மக்களை உரிய முறையில் சென்றடையும்.

நீங்கள் அரசின் திட்டங்களான குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், பொது விநியோகத் திட்டம், சத்துணவு மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் திட்டம், தகுதியுடைய நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் திட்டம், கிராமப்புரம் மற்றும் நகர்ப்புரங்களில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரித்தல் மற்றும் சுகாதாரத் திட்டங்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மற்றும் அதற்கு தீர்வு காணுதல், வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு பட்டா வழங்குதல், அம்மா திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், நெகிழி ஒழிப்பு, அம்மா இருசக்கர வாகனத் திட்டம், பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை, வேளாண் சார்ந்த திட்டங்கள் போன்ற திட்டங்களை ஒவ்வொரு மாதமும் கள ஆய்வு மேற்கொண்டு அந்த விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை மாதந்தோறும் என்னுடைய அலுவலகத்திற்கு அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அனுப்ப வேண்டும். இந்தக் கூட்டம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எனது தலைமையில் நடக்கும்.

பருவமழை பொய்த்ததன் காரணமாக நமது மாநிலத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு நீர்வள ஆதார மற்றும் மேலாண்மை இயக்கத்தை நேற்று நான் துவக்கி வைத்தேன். நமது நீராதாரங்களை பாதுகாக்கவும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்கவும், நீர் நிலைகள் மாசுபடாமல் தடுக்கவும், பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்யவும், ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காமல் நாம் அதை சேமிக்க வேண்டும்.

இந்த அரசு மக்கள் அரசு என்பதையும், ஏழை எளியோரின் நலன் காக்கும் அரசு என்பதையும், அவர்களுக்கு செயலாற்றும் அரசு என்பதையும் மக்கள் உணரும்படி மாவட்ட கலெக்டகள் மாவட்டங்களில் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி அரும்பணியாற்ற வேண்டும் என்பதை நான் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.