கயானா, ஆக.8: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கயானாவில் இன்று தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. அதன்படி நடந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் விண்டீஸை வொயிட் வாஷ் செய்து இந்திய அணி தொடரை வசப்படுத்தியது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கயானாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி தற்போது இளம் வீரர்களை கொண்டு மிகவும் அபாரமாக ஆடி வருகிறது. பரிசோதனை முறையில் மாற்றுவீரர்களையும் களமிறக்கி கலக்கிவருகிறது. டி20 தொடரில் பேட்மேன்கள் சொதப்பினாலும் இளம் வீரர்கள் தங்களது கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் எதிரணியை வெகுவாக கட்டுப்படுத்தினர். பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர் ரோகித் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்த மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான், இன்னும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். கேப்டன் கோலி, மனிஷ் பாண்டே, ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கிற்கு வலுச்சேர்க்கின்றனர்.

விண்டீசில் முன்னணி வீரர்கள் நீக்கம்:
டி20 தொடரில் பிராத்வெயிட் தலைமையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் தொடரில் ஹோல்டர் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியில் டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பொலார்ட், நரேன் ஆகிய முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிறிஸ் கெயில் அணிக்கு திரும்பியுள்ளார். டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க விண்டீஸ் மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.