வேலூர், ஆக.8: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த பணியில் 375 அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மாலை 12 மணிக்கு முன்பாக யார் வெற்றி பெறுவார் என தெரிய வரும்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது . இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் தமிழக போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. காவல்துறையை சேர்ந்த 320 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ பார்த்தீபன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாக்குகள் மட்டும் தனியாக வைக்கப்பட்டு இருக்கும். அதில் கியூஆர் கோடு இருக்கும். அந்த கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

இதன்பின்னர் 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் காலை 12 மணிக்கு முன்பாக தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவிபேட்டில் எந்த சின்னத்துக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது கணக்கிடப்படும்.

இதில் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட்டில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் மாறுபாடு இருந்தால் விவிபேட்டில் பதிவான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் .