சென்னை, ஆக.8: தகவல் துறை அமைச்சர் மணிகண்டன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் தகவல் துறை அமைச்சர் மணிகண்டனை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவி நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த இரண்டு ஆண்டு கால எடப்பாடி ஆட்சியில் அமைச்சர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மணிகண்டன் பதவி நீக்கம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வது முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமையாகும். அது குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.

எதற்காக அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, காரணம் தெரியாது என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.

இதனிடையே பதவிநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் இன்று காலை விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை வந்தார். ஆனால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க அவர் மறுத்துவிட்டார்.

பதவி நீக்கம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என்று மணிகண்டன் முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.