மும்பை, ஆக.8: இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக விளக்கம் கேட்டு, இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு, முன்னாள் வீரர்கள் கங்குலி, ஹர்பஜன் உள்ளிட்டோர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு, பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை செய்து வருகிறார். இவ்வாறு இருக்கும் போது இந்திய சிமெண்ட்ஸில் துணைத் தலைவராக எப்படி இருக்க முடியும்? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. எனவே, இது குறித்து ராகுல் டிராவிட் 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி தனது டிவிட்டர் பதிவில், இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பதவி ஆதாயம் என்ற புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கின் டிவிட்டர் பதிவில், இந்திய கிரிக்கெட் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை ராகுல் டிராவிட்டை விட சிறந்த நபர் இந்திய கிரிக்கெட்டில் இருக்க முடியாது. இது போன்ற முன்னாள் வீரர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதன் மூலம், பிசிசிஐ அவர்களை அவமானப்படுத்துகிறது, என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.