காஞ்சிபுரம், ஆக.8: காஞ்சி அத்தி வரதர் இன்று இள மஞ்சள் மற்றும் பச்சை நிற பட்டாடை அணிந்து இரண்டு கையிலும், தோள்களில் பச்சை கிளிகள் வைத்தபடி காட்சி தந்தார்.

ஆதி அத்திவரதரின் திருக்காட்சி இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக நள்ளிரவு 2:30 மணியளவில் பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்

கடந்த 38 நாட்களில் தற்காலிகமாக வைத்துள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டு 4 கோடியே 90 லட்சத்து 90 ஆயிரத்து 937 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் 1 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 980 ரூபாய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

நின்ற கோலத்தின் 8வது நாள் இன்று எம்பெருமானுக்கு இளம் மஞ்சள் வண்ணத்தில் பச்சை கலர் பார்டரும், பன்னீர் ரோஸ் நிறத்தில் அடர் ரோஸ் கலர் பார்டர்கள் பட்டாடையில், செண்பகம், மல்லிகை, ரோஜா , தாமரை, மாலைகள் அணிவிக்கப்பட்டும் பெருமாளின் கைகளிலும், தோள்களிலும் பச்சைக்கிளிகள் வைக்கப்பட்டும் பாதத்தில் பலவண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட ஜடைமாலைகளில் சிறப்பு காட்சி கொடுத்து வருகிறார்.இன்று அதிகாலை 5 மணிக்கு பெருமாளுக்கு அலங்காரம் நெய்வேத்தியம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப் பட்டனர்.

அதிகாலையிலேயே அத்திவரதரை காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.

இன்னும் 9 நாட்களே காட்சி கொடுக்கும் ஆதி அத்திவரதர் எம்பெருமானை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களிலும் இருந்து பக்தர்களின் கூட்டம் காஞ்சி நகரத்தையே களை கட்டியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.