வேலூர், ஆக.9: வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகம் காலை 11 மணி நிலவரப்படி 1,98,433 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான கதிர் ஆனந்தை (1,81,440 வாக்குகள்) விட 16,993 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது வேலூர் நாடாளுமன்றத்தில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் வேலூரில் பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 72 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

தேர்தலில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 1177 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் ஒவ்வொரு சுற்றாக எண்ணப்படும் போது தொடர்ந்து ஏ.சி.சண்முகமும், கதிர் ஆனந்தும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஏ.சி.சண்முகம் ஒரு லட்சத்து 98,433 வாக்குகளும், திமுகவின் கதிர் ஆனந்த் 1,81,440 வாக்குகளும் பெற்றுள்ளனர். மூன்றாவதாக நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 5041 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் அதிமுக 16,993 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.