திருவனந்தபுரம், ஆக.9:  கேரளா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வரும் 11-ம் தேதி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இது மட்டுமின்றி கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பரப்பில் காற்றின் வேகம் அனுமானிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும் எனவும் வேகம் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோட் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக கேரளா மாநிலத்தில் வரும் 11-ம் தேதி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.