வேலூர், ஆக.9: வேலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி அதிமுக, திமுக வேட்பாளர் இடையே முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்த நிலையில், முடிவில் 9,018 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 72 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று காலை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் 3,039 தபால் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. அதையடுத்து ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,777 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து 4 சுற்றுகளில் ஏ.சி.சண்முகமே அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார்.

2-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 29,401 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24,928 ஓட்டுகளும் பெற்றனர். 4-வது சுற்றில் ஏ.சி.சண்முகம்1,09,959 ஓட்டுகளும், கதிர் ஆனந்த் 99,242 ஓட்டுகளும், 5-வது சுற்றில் ஏ.சி.சண்முகம்1,34,593 ஓட்டுகளும், கதிர் ஆனந்த் 1,25,578 ஓட்டுகளும், 6-வது சுற்றில் ஏ.சி.சண்முகம்1,57,743 ஓட்டுகளும், கதிர் ஆனந்த் 1,52,546 ஓட்டுகளும், 7-வது சுற்றில் ஏ.சி.சண்முகம் 1,80,715 ஓட்டுகளும், கதிர் ஆனந்த் 1,81,331 ஓட்டுகளும் பெற்றனர்.

தொடர்ந்து ஏ.சி.சண்முகம் 12 ஆயிரம் ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இதனால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர். பின்னர் 8-வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது நிலமை தலைகீழாக மாறத்தொடங்கியது. 8-வது சுற்றில் கதிர் ஆனந்த் 2,08,831 ஓட்டுகளும், ஏ.சி.சண்முகம் 2,06,133 ஓட்டுகளும் பெற்றனர். இந்த சுற்றில் ஏ.சி.சண்முகத்தை விட 2 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலைக்கு மாறினார்.

பின்னர் 9-வது சுற்றில் கதிர் ஆனந்த் 2,36,836 ஓட்டுகளும், ஏ.சி.சண்முகம் 2,30,645 ஓட்டுகளும், 10-வது சுற்றில் கதிர் ஆனந்த் 2,92,541 ஓட்டுகளும், ஏ.சி.சண்முகம் 2,78,327 ஓட்டுகள் பெற்றிருந்தனர். பகல் 1 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3,75,355 ஓட்டுகளும், கதிர் ஆனந்த் 3,88,280 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சமி 23,358 வாக்குகள் பெற்றிருந்தார்.  தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னணி நிலவரம் மாறிக்கொண்டே இருந்ததால் விநாடிக்கு விநாடி பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26 ஆயிரத்து 995 வாக்குகளும் பெற்றனர்.