காஞ்சிபுரம், ஆக. 9: ஆதி அத்திவரதரின் தரிசனம் வரும் 16-ம்தேதியுடன் முடிவடைய உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காஞ்சி ஸ்ரீ அத்தி வரதர் இன்றோடு தொடர்ந்து 40 நாட்களாக தரிசனம் அளித்து வருகிறார். இன்று ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு என்பதால் ஆதி அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு பட்டாடை அணிவிக்கப்பட்டு, செண்பகம் மற்றும மல்லிகை மாலை சாற்றப்பட்டும் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அத்தி வரதர் வைபவம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் அதிக அளவு பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். நள்ளிரவு 12 மணி முதலே காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் இதை விட அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 1200 தூப்புரவு பணியாளர்களுடன் கூடுதலாக 500 துப்புரவு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
நாளை முதல் பக்தர்கள் தங்குவதற்கு கூடுதலாக 2 தற்காலிக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் அத்தி வரதரை மூன்று லட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை அத்தி வரதரை 74 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கடந்த 39 நாட்களில் தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.