சென்னை, ஆக.9: தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். அப்போது திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் குடிமரமாத்து திட்டம், மழை நீர் சேகரிப்பில் கலெக்டர்கள் நேரடியாக கள ஆய்வு செய்து மாதம் மாதம் அறிக்கை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கினர்.இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று 13 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெறும் கலெக்டர் ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்ட கலெக்டருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
வேறொரு நாளில் அவருடன் வேலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மழை வெள்ளம் மீட்பு பணியில் கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளதால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.