சென்னை, ஆக.9: சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டுமென்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் நேரில் வலியுறுத்தினார்கள்.
சென்னை நகரில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வழக்கமாக கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படும். ஆனால், போதிய தண்ணீர் கையிருப்பு இல்லாததால் ஆந்திர அரசு தண்ணீர் வழங்கவில்லை.

ஆனால் தற்போது கிருஷ்ணா நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கிருஷ்ணா நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து சென்னைக்கு கிருஷ்ணா நீரை பெறுவதற்கு பேச்சு வார்த்தை நடத்துமாறு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் வேலுமணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரு அமைச்சர்கள் தலைமையில் தமிழக அரசு அதிகாரிகள் ஐதராபாத் சென்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து கண்டலேறு அணையிலிருந்து தெலுங்கு கங்கை கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். தமிழக எல்லையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் ஆந்திரா அரசு கட்டியுள்ளது. மேலும் தடுப்பணைகளை ஆழப்படுத்தும் பணியையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.