சென்னை, ஆக.9:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற 11-ம் தேதி சென்னை வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வருகிற 11-ம் தேதி காலையில் கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் அலோசனை நடத்தினர். இதற்கிடையே சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி விமான நிலையத்துக்கு ஒரு மர்மத் தொலைபேசி வந்தது. இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒரு பெண் அந்த தொலைபேசியில் பேசினார்.

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்படும் என்று அந்தப் பெண் பேசினார். உடனடியாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் சென்னை விமான நிலைய அதிகாரிகளை எச்சரிக்கை செய்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி ஏற்கனவே சென்னை விமான நிலையத்துக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி உள்ளனர்.